நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் ஆகியப் பகுதிகளில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்பட்டு, அவைகளுக்கான திறப்பு விழா இன்று(ஜூலை 18) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் தாரணி ஆகியோர் பங்கேற்று நீதிமன்றங்களைத் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், 'நீதி தான் நம்முடைய இலக்காகவும் கொள்கையாகவும் உள்ளது. நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டட வசதிகளை அரசு செய்து வருகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டு வருவதால் வழக்குகள் தேக்கமடையாமல் விசாரிக்கப்படும்' என்றார்.
நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நீதிமன்ற தொடக்க விழா நிகழ்ச்சிகளில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், வழக்கறிஞர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.