நாமக்கல்: குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர், சித்திரவேல். ஹோட்டல் நடத்தி வரும் இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையைப்பூட்டிவிட்டு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் கடையில் உள்ளே சத்தம் கேட்பதாக அருகில் குடியிருப்பவர்கள் எட்டிப்பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையிலிருந்து குதித்து வெளியே செல்வது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடைக்கு வந்த சித்திரவேல் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பார்த்துள்ளார். வாயில் டார்ச் லைட் வைத்துக்கொண்டு கடையில் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவன், பொருட்களை நோட்டமிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் வாகனத்தை திருட முடியாததால் கல்லாப்பெட்டியில் இருந்த 20,000 ரூபாய் பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதற்கிடையே கடையில் மற்ற பொருட்கள் இருப்பது குறித்து சரிபார்த்த உரிமையாளர் சித்திரவேல், கடையின் கல்லாப்பெட்டி அருகே சார்ஜ் போட்ட நிலையில் மொபைல் போன் இருப்பதைப் பார்த்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் திருட வந்த இளைஞர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, எடுக்காமல் மறந்துவிட்டுச்சென்றது தெரியவந்தது.
இதன் பின்னர் போலீசார் விட்டுச்சென்ற செல்போனை பறிமுதல் செய்து, அதை வைத்து கடைத் திருட்டில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் செல்போனை விட்டுச் சென்ற திருடனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 7-ஆவது நபரை திருமணம் செய்ய முயற்சி ..ஸ்கெட்ச் போட்டு பிடித்த 6-ஆவது கணவர்...