மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல் தூண்கள் அமைக்கும் பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணத்தில் இருந்து கற்கள் கொண்டு செல்வதற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆர். பட்டணம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ராயர் மண்டபம் சேதமடைந்தது. இதனை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 18 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கருங்கற்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி செயற்குழுகூட்டம் நடைபெறுகிறது. ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உரிய பாதுகாப்புடன் கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, அது குறித்து தன்னால் ஏதும் கூறமுடியாது என தெரிவித்த அமைச்சர், வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் சிலையில் காவி நிறம்; அரசியல் தலைவர்கள் கண்டனம்!