நாமக்கல் அருகே பொம்மகுட்டைமேடு பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி அணியினரின் கட்சியின் 51-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த மர்ம கும்பல் கட்சி நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பர்ஸ், ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை பிக் பாக்கெட் அடித்துச்சென்றுள்ளனர்.
குறிப்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், வார்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அவற்றில் பெரும்பாலும் விலை உயர்ந்த ஐபோன்கள் ஆகும். பணம் மற்றும் செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வரும் எனக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இது போன்ற சம்பவம் நடந்திருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கட்சி தொண்டர்கள் பலரின் செல்போன்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு வேண்டும் என்றே குறைந்த அளவிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வைத்ததாகவும் அவர்களும் பணியில் மெத்தனமாக இருந்ததால் இந்த திருட்டுச் சம்பவம் நடந்ததாகவும் அதிமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அதிமுகவின் முக்கிய கட்சி பிரமுகர்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போட்டிக்கு தயாராகும் ஓபிஎஸ்.. ஈபிஎஸ் அணியின் அடுத்த பிளான்?