தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை மாநில மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பி காளியப்பன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் பிரதமராக மீண்டும் மோடிதான் பொறுப்பேற்பார். அதிமுக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் " என்றார்.
தொகுதி அறிவிப்பின்போது பாமகவும் தேமுதிகவும் ஏன் பங்கெடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அது தவறான தகவல் முதல் நாளே இரண்டு கட்சிகளும் தொகுதி பட்டியலில் கையெழுத்திட்டிருக்கிறார். தங்களுக்கு பணி இருக்கின்ற காரணத்தினால் வர இயலாது என அவர்கள் முதல் நாளே கூறிவிட்டனர் " என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தங்கமணி, "எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. பத்திரிகையாளர்கள்தான் இதைப் பற்றி கூறி வருகின்றனர். மக்களுக்கு எதைச் செய்ய முடியுமோ அதை நாங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு என்ற கருத்து கணிப்பு தெரிவிக்கிறது என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்புகள் பலமுறை பொய்துள்ளன. அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும் " என தெரிவித்தார்.