நாமக்கல் மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சி பணி தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க முறையாக நடைபெற்றுவருகிறது.
இதை அரசியலாக பார்க்கக்கூடாது. அகழ்வாராய்ச்சி குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசித்து பழமை மாறாமல் கீழடியை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் அரசியலுக்காக கீழடி சென்று பார்வையிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இப்போது 75 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஒன்றாக நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கு முதலமைச்சர் மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம்.
டாஸ்மாக் கடைகளுக்கான டெண்டர் வருகின்ற முப்பதாம் தேதி விடப்படும். தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருந்தன. தற்போது அதனைக் குறைத்து 2000 கடைகளாக மாற்றியுள்ளோம். அதுபோல படிப்படியாக மதுபானக்கடைகளும்,பார்களும் குறைக்கப்படும்.
விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வருடத்திற்கு 10,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தாண்டு தட்கல் முறையில் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1முதல் 31ஆம் தேதி வரை பெறப்படும் " என்றார்.
இதையும் படிங்க: கனமழையால் பாதிக்கப்பட்ட மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதி- அமைச்சர் தங்கமணி