தமிழ்நாடு அளவில் நாமக்கல் மாவட்டம் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதால் ஹாட் ஸ்பாட் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2133 பேரின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் 50 பேருக்கு கரோனா இருந்தது கண்டறியப்பட்டது. கடந்த வாரம் 6 பேரும், தற்போது 33 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 11 பேரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில், 900 அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளதையடுத்து, அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து, மருத்துவர்கள், ஆய்வகப் பணியாளர்களுக்கு, சுகாதாரத் துறை மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் எஸ். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பயன்படுத்தும் முறைகள், அறிகுறி உள்ளவரிடம் மருத்துவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ரத்த மாதிரி எடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
மேலும், இக்கருவியில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆர்.ஏ.டி.ஐ (Rapid Antibody Test of India) செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் மாவட்டத் தகவல் மைய அலுவலர் செல்வக்குமார் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் கேள்விக்குறியாகும் காலணி தைப்பவர்களின் வாழ்வாதாரம்!