நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கழிவறையில் மேல்கூரை இல்லாததால், சில சமூக விரோதிகள் கடந்த வியாழக்கிழமை மாணவி ஒருவரை ஆபாசமாக படம் எடுக்க முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி அவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து அவர்கள் படம் பிடித்ததால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை தாக்கி சீருடையை கிழித்ததால், மாணவி அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்துள்ளார். இதை பார்த்த சக மாணவிகள், ஆசிரியருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மயக்கமடைந்த பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டு ஆசிரியர் அறையில் ஒய்வெடுக்க வைத்துள்ளனர்.
பின்பு மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தகவல் கூறியுள்ளனர். பெற்றோர் பள்ளிக்கு வந்த பிறகு உங்கள் மகள் ஆடையில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு கோபமடைந்த பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதயைடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியரான சரஸ்வதி சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சாந்த மூர்த்தி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து சிசிடிவி கேமராக்கள் வைத்து பள்ளியில் இருந்து மாணவிகள் வீடு திரும்பும் வரை உரிய பாதுகாப்பு தர காவல்துறை உறுதுணையாக இருக்கும் எனகூறியதை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.