நாமக்கலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் சரத்குமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ரஜினி அரசியலுக்கு வருவதாக இதுவரை அறிவிக்காத நிலையில், ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்துகிறது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமான நிலையில், சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறப்பால் இந்தியருக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர். மேலும், சட்டத்தில் பாதகமான விஷயங்கள் இருந்தால், அதனை அரசிடம் கோரிக்கையாக முன் வைத்து தீர்வு பெறலாம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி வசதிகளுடன், படப்பிடிப்பை நடத்துவதோடு, நடிகர்கள், ஊழியர்களுக்கு தயாரிப்பாளர்களே காப்பீடு செய்திட வேண்டும்.
மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை நாடுவது அவர்களது விருப்பம். இருந்த போதிலும் கட்சியில் பல ஆண்டுகளாக உள்ள தொண்டர்கள், நிர்வாகிகளை நம்பாமல், கொள்கை கோட்பாடுகளை மறந்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிகளைக் கொட்டித் தருவது தேவையில்லை என்பது எனது கருத்து ஆகும்.
மக்களுக்கு என்ன தேவை, தங்களால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என அரசியல் கட்சிகள் உணராவிட்டால், அவர்கள் எதற்காக ஆட்சியை பிடிக்க ஆசைப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்'