நாமக்கல் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி அய்யம்மாள் (80). இவர், தனது கணவரை இழந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது இரண்டு மகன்களும் இறந்ததால் தனது மருமகள்கள், பேரன் பேத்தி ஆதரவில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக யாரும் சரிவர கவனிப்பதில்லை என மூதாட்டி அய்யம்மாள் வேதனையில் இருந்து வரும் நிலையில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அவ்வப்போது புகார் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், காவல் துறையினர், மூதாட்டி மனக்குமுறலை கேட்க நேரம் இல்லாததால் அவரை ஒவ்வொரு முறையும் பேசி, சமாளித்து காவல் நிலையத்தை விட்டு அனுப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல புகார் தெரிவிக்கலாம் என பள்ளிபாளையம் காவல் நிலையம் வந்த மூதாட்டி அய்யம்மாளை அங்கு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் யுவராஜ் தரக்குறைவாக பேசியதுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு மூதாட்டியை காவலர் தள்ளிவிட்டார்.
“ஒவ்வொரு முறையும் உன்னால் ஒரே தொந்தரவாக இருக்கிறது. எங்களுக்கு வேறு வேலை இல்லையா” என்று கனத்த குரலில் தெரிவித்து மூதாட்டியை அனுப்பினர். இதன் பின்னர் மற்றொரு காவலர், ''காவல் ஆய்வாளர் இன்னும் வரவில்லை மாலையில் சந்திக்குமாறு'' தெரிவித்து அனுப்பினர். முதியோர் உதவித்தொகை பெற்று வாழ்வாதாரம் நடத்தி வரும் நிலையில் வயது முதிர்ச்சி காலத்தில் யாரும் கவனிக்கவில்லை என்கிற வருத்தத்தை பேச முடியாமல் செய்கை மூலம் மூதாட்டி வெளிப்படுத்தினார்.
காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் புகார் மனுவை கண்ணியத்துடன் பெற்று விசாரணை செய்யும் முன்பு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுபோன்ற காவலர்கள் செய்யும் செயலால் காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கு உள்ள அதிருப்தி அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: சென்னையில் கொசு தொல்லை.. ட்விட்டரில் பறந்த புகார்.. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!