உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக நாமக்கல்லில் சட்டப்பணிகள் ஆணைக்குழு, பசுமை நாமக்கல், ஸ்பெக்ட்ரம் பள்ளி, எச்.டி.எப்.சி வங்கி இணைந்து லத்துவாடி கிராமத்தில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தை மழை ஈர்ப்பு மையமாக மாற்றும் முயற்சியில், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் இணைந்து சுமார் 630 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இது குறித்து பசுமை நாமக்கல் செயலர் தில்லை சிவக்குமார் பேசுகையில், "ஒரு குழிக்குள் ஒரு மரம் என்ற அடிப்படையில் இல்லாமல், ஜப்பான் நாட்டுத் தாவரவியல் பேராசிரியர் மியோவாக்கி உருவாக்கிய முறையான ஒரு குழிக்குள் சுமார் நான்கு முதல் ஐந்து மரங்கள் நட்டுவைத்து அடர்வனக்காடுகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு மரக்கன்றுகளாக நட்டு வைத்து வளர்ப்பதை விட இதுபோன்ற முறையினால் ஒரு வனத்தினை எளிதாக உருவாக்கலாம். இதன் மூலம் மழையின் அளவு அதிகமாகும்" என்று தெரிவித்தார்.