நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கரூரிலிருந்து பரமத்திவேலூருக்கு வந்த காரில் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதாக அடையாள அட்டை ஒட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அடையாள அட்டையை ஆய்வு செய்தார்.
அதில், அரசு துறை சார்ந்த யாரிடமும் அனுமதி பெறாமல் போலியான அடையாள அட்டையை ஒட்டியிருப்பதைக் கண்டறிந்தார். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜேந்திரனை கைது செய்த காவல் துறையினர், காரையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு அவ்வழியாக வந்த அனைத்து வாகனத்தையும் காவல் துறையினர் ஆய்வுசெய்த பின்பே அங்கிருந்து செல்ல அனுமதியளித்தனர்.
இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்