கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பரமத்தி அருகே மாரியம்மன் கோயில் காவலாளியை தாக்கி, அறையில் வைத்து பூட்டிய கொள்ளையர்கள், கோயிலில் இருந்த சாமியின் தங்கத்தாலி, தங்க பொட்டு, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பரமத்திவேலூரை அடுத்துள்ள கீரம்பூர் பகுதியில் கொள்ளையடித்த பொருட்களை பங்கிட்டு கொண்டு இருக்கும் போது, அவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையை அடுத்த திருமங்கலத்தை சேர்ந்த முருக்கு என்கிற முருகசுந்தரம், சுரேந்திரன் என்கிற ராஜு மற்றும் முத்து என்கிற கருப்பசாமி என்பது தெரியவந்தது. அவர்கள் பரமத்திவேலூர், கீரம்பூர், மற்றும் கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையயடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பழனிக்குமார், 3 பேருக்கும் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு 33 நாட்களில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹெராயின் கடத்திய இலங்கைப் படகு சிறைப்பிடிப்பு: 6 பேர் சிறையில் அடைப்பு