நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மணியனூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், மேட்டூர் அணையின் உபரி நீரை திருமணிமுத்தாறில் திருப்பிவிடக்கோரி நடைபயண பேரணி நடைபெற்றது.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசுகையில், "முதலமைச்சர், அமைச்சர்கள் அரசு நிதியை பயன்படுத்தி தேர்தல் பரப்புரை செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க உடனடியாக தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் பரப்புரை செய்வது ஆட்சியா அரசியலா என்பதை புரிந்துகொண்டு பேச வேண்டும். போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். விவசாயிகளை கொச்சப்படுத்துவதை பாஜகவிடமிருந்து அதிமுகவினர் கற்றுக்கொண்டு விட்டீர்களா. காவிரி - திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்றாவிட்டால் திமுக ஆட்சியில் 100 விழுக்காடு உறுதியாக நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... ஸ்டாலின் வாரிசு தவிர வேறு என்ன முத்திரை உள்ளது - உதயநிதியை சீண்டும் முதலமைச்சர்!