பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றிலிருந்து பாசனத்திற்கு தேவையான 200 கன அடி தண்ணீர் ராஜவாய்க்காலில் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி தண்ணீரை திறந்து விட்டனர். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நஞ்செய் இடையார், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், மோகனூர் பகுதி என 16,143 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஜனவரி 24 ஆம் தேதி வரை 200 கன அடியில் நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “ விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று ராஜவாய்க்காலில் 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜவாய்க்கால் சீரமைப்பு பணிக்காக 184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தற்போது 95% பணிகள் நிறைவடைந்துள்ளன.
மின்சார ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீபாவளி பண்டிகை முடிந்ததும், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் ” என்றார்.
இதையும் படிங்க: சேலத்தாம்பட்டி ஏரியின் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பிவிட முடிவு!