நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைத்தீர் கூட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வளிக்கும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு 1127 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 1915 பேர் விருப்ப மனு பெற்றுள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயங்கியதில்லை. அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் விரிசலை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர். அது ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்தே உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம்.
தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ரஜினி ஈடுபட்டால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாங்கள் யாரையும் நம்பி இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம் என்றார்.
மேலும், முதலமைச்சரின் சிறப்புக் குறைத்தீர் கூட்டத்தின் மூலம் இதுவரை 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 10 ஆயிரம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஆஹா ரஜினி சொன்ன அதிசயம் இதுதானா..?’ - திருப்பிவிட்ட முதலமைச்சர் பழனிசாமி!