நாமக்கல் அடுத்த வீசாணம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், சந்திரா தம்பதியினருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. இதை வீடில்லாதவர்களுக்கு வழங்க, ஆதி திராவிடர் நலத்துறை 1987ஆம் ஆண்டு 40 ஆயிரத்து 347 சதுர அடி கொண்ட நிலத்தை கையகப்படுத்தியது.
அப்போது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் 1996ஆம் ஆண்டு நிலத்திற்கு இழப்பீடாக 77 ஆயிரத்து 46 ரூபாய், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் இழப்பீடாக ரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து தங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி, ரங்கநாதன் நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணை நாமக்கல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ரங்கநாதன் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கை அவரது மனைவி சந்திரா நடத்தி வந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சந்திராவிற்கு இழப்பீடாக 18 இலட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அவருக்கு இழப்பீடு வழங்காத நிலையில், சந்திரா நீதிமன்றத்தை மீண்டும் நாட, அவருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் உள்ளிட்ட ஐந்து அலுவலர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சந்திரா நீதிமன்ற பணியாளருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அங்கிருந்த வாகனங்களை ஜப்தி செய்ய முயன்றபோது, அங்கிருந்த கார்களை ஓட்டுநர்கள் எடுத்துச் சென்று விட்டதால், மாவட்ட திட்ட அலுவலரின் கார் மட்டுமே இருந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் காரின் முன் அமர்ந்து, சந்திரா காலை 11 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டார்.
மாலை 6 மணி வரை எந்த அலுவலரும் அவரிடம் பேச்சுவார்த்தைக் கூட நடத்தவில்லை என சந்திரா தெரிவித்தார். நாம் இதுகுறித்து செய்தி சேகரித்ததை அறிந்த பின்னர் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இழப்பீடு தொகை வழங்குவதாக அளித்த உறுதியின் பேரில், மூதாட்டியின் 7 மணி நேர தர்ணா போராட்டம் நிறைவடைந்தது.
தனது சொந்த நிலத்தை அரசிற்கு வழங்கி, தனது வாழ்வாதாரத்தை இழந்து 33 ஆண்டுகளாக இழப்பீடு கேட்டும் கிடைக்காமல், இந்தப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாமல் மூதாட்டி சந்திரா நிர்கதியாக உள்ளார்.
இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட விவசாயம் - என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா