நாமக்கல்: ராசிபுரம் அடுத்த தும்பல்பட்டியைச் சேர்ந்தவர், செல்வம் (42). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர், சார்ஜர் மூலம் இயங்கும் 22kg எடை கொண்ட சமையல் அடுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த அடுப்பினை மூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு எனப் பல வகையாகப் பிரிக்கலாம்.
பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும், நகரங்களில் சமையல்வாயு பயன்படுத்தும் அடுப்புகளையும் உபயோகிக்கின்றனர். ஆனால், இவர் கண்டுபிடித்த அடுப்பு, 12 வோல்ட் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வம் கூறுகையில், “இந்த அடுப்பு எல்லா விதமான சமையல் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். விவசாய நிலத்தில் மருந்து அடிக்கும் இயந்திரத்திற்கு பயன்படும் பேட்டரியைக் கொண்டு, ரெகுலேட்டர் மூலம் காற்றழுத்தம் கொடுத்து, அடுப்பின் தீ அளவைக் குறைக்க மற்றும் அதிகரிக்க முடியும்.
இதனால் எரிபொருள் செலவு சிக்கனம் ஆவது மட்டுமின்றி, வீட்டிற்கு எரிவாயு பயன்பாடு தேவை இருக்காது. எரிவாயு இல்லாமல், இவ்வாறு அடுப்பு பயன்படுத்துவதால் வீட்டில் செலவு குறையும்” எனத் தெரிவித்தார். இவரது புதிய வகை அடுப்பை சுற்றுவட்டார மக்கள் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.