கரோனா தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தொழில்களை நசிவுற செய்துள்ளது. இந்த ஊரடங்கால் பலர் வேலை இழந்து வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களது பொருட்களை எவ்வாறு விற்பனை செய்தனர் என்பது குறித்து நாமக்கல்லில் கள ஆய்வு மேற்கொண்டோம்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 765 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் 91 ஆயிரத்து 776 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றுள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள், 'சிவசக்தி மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுவை நடத்தி வருகின்றனர்.
இங்கு குழுத்தலைவி சித்ரா தலைமையிலான 11 பெண்கள் கடன்பெற்று பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் பாலைக் காய்ச்சி, அதிலிருந்து தயிர்,மோர் மற்றும் பன்னீர் ஆகியவை தயார் செய்து டீலர்கள் மூலம் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்னையில் உள்ள உணவகத்திற்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்துவருகின்றனர். இதனால், மாதம் 30ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வந்தனர். ஆனால், கரோனா ஊரடங்கில் விற்பனை 50 விழுக்காடு வரை குறைந்தது என வேதனை தெரிவிக்கின்றனர்.
"போதமலை அடிவாரமான தங்களது கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து மொத்தமாக பாலை வாங்கி சுத்தமான முறையில் தயிர், மோர் மற்றும் பன்னீர் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம். கரோனா ஊரடங்கில் பால் பொருட்களை விற்பனை செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. பால் பொருட்கள் என்பதால், ஓரிரு நாட்களில் கெட்டுவிடும். ஊரடங்கில் தயிர்,மோர்,பால் மற்றும் பன்னீர் போன்றவை மீதியாகின. அருகில் உள்ள கடைகளில் மட்டுமே பால்பொருட்களை விற்பனை செய்ய முடிந்தது. அதனையும் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தோம். ஊரடங்குத் தளர்விற்குப் பிறகு பழைய விற்பனை இல்லை, குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்கிறார், மகளிர் சுய உதவிக் குழுத் தலைவி சித்ரா.
இதுகுறித்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் லதா மகேஸ்வரி கூறுகையில், "தங்கள் குழு உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறோம். கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்களும் விற்பனை ஆகாமல் தேங்கின. விற்பனை செய்ய கடும் சிரமப்பட்டோம். எனவே, குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்து அண்டை கிராமங்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம். பால் பொருட்கள் உடலுக்கு குளிர்ச்சி என்பதாலும் கரோனா காலத்தில் சளி போன்ற ஒவ்வாமை ஏற்படும் என பொதுமக்கள் தற்போது வரை தவிர்த்து வருகின்றனர். இதனால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வருவதே மிகவும் கடினம்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மணி கூறுகையில், "கரோனா பொதுஊரடங்கு நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்புக் கடன் வழங்கப்பட்டது. இதில் ஒரு குழுவிற்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் கிராமப்புறங்களில் 4,096 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், நகர்ப்புறங்களில் 382 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் என மொத்தம் 4,478 குழுவினருக்கு 41 கோடியே 62 லட்ச ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இத்தனை கைகள் பெண்ணுக்கு கை கொடுத்தாலும், துயர் காலங்களை தன் போராட்டக்குணத்தால் மீட்டெடுக்கும் சக்தி பெண்களுக்கு எப்போதும் உண்டு. அப்படி சிவசக்தி மகளிர் சுய உதவிக்குழுவினரும் கரோனா தரும் இடர்களில் இருந்து மீண்டு வருவார்கள். தங்களை நம்பியுள்ள குடும்பங்களை அன்பால் நிரப்புவார்கள் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க...மழைக்கால மழலை பராமரிப்பு...!