நாமக்கல் பேருந்துநிலையம் அருகே ராசிபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான கணினி உதிரிபாகங்கள் விற்பனை மையம் கடந்த 18 வருடங்களாக இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து, இன்று அதிகாலை மூன்று மணியளவில் முகமூடி, பர்தா அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை வழக்கம்போல் கடையின் உரிமையாளர் ராஜகோபால் கடையை திறந்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் ராஜகோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அதே கடையில் கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றி வந்த உதயசூரியன் என்பவர் இந்த கொள்ளை சம்ப்வத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, உதயசூரியன் கைது செய்யப்பட்டார்.
மேலும், புகார் அளித்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த குற்றப்பிரிவு காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ரொக்கப்பணம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஐந்து வருடங்களாக அதே கடையில் ஊழியராகப் பணியாற்றும் உதயசூரியனிடம் கடையின் உரிமையாளர் ராஜகோபால் ரூ.5 லட்சத்தை கொடுத்து பாதுகாப்பாக வைக்க கூறியுள்ளார். அதன்பின்னரே பணத்தை வைப்பதுபோல் வைத்து அதிகாலையில் பர்தா அணிந்துகொண்டு பணத்தைத் திருடியுள்ளார்” என கூறினார்.