நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மளிகை கடைகள், மருந்து கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் பேசியதாவது:
பொதுமக்களும் வியாபாரிகளும் நகராட்சி நிர்வாகம் எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது நகராட்சி நிர்வாகத்தின் நோக்கமில்லை. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உபயோகிப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். கடைகளில் தனிப்பட்ட இடைவெளியை கடைப்பிடிக்க, வட்டம் வரையப்படவேண்டும்.
பணிக்கு வரும் ஊழியர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என்றார்.
மேலும், வணிக நிறுவனங்கள், பணமில்லா பரிவர்த்தனையான ஆன்லைன் மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!