நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2019-2020ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் திறனாய்வுப் போட்டி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். திருக்குறள் முற்றோதல் திறனாய்வுப் போட்டியில் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் பயிலும் மாணவி அனன்யா 1,330 திருக்குறளையும் ஒப்புவித்து வெற்றிபெற்றார்.
இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவி அனன்யாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். மேலும் திருக்குறள் புத்தகத்தையும் பரிசாக வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவரது தந்தை அசோக்ராஜ், தாயார் சரண்யா ஆகியோரையும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்திப் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோதி உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்.