நாமக்கல் மாவட்டம் என்றாலே கோழிப்பண்ணை தொழிலும் லாரி தொழிலும்தான் நினைவுக்குவரும். ஏனெனில் நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிகளவு கோழிப்பண்ணைகள் உள்ளதால் முட்டை ஏற்றுமதியில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் கல்வியிலும் நாமக்கல் மாவட்டம் முதன்மையான இடம்பெற்றிருந்தது.
இங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். அதன்படி நாமக்கல் 'கல்வி மாவட்டம்' என அழைக்கப்படுகிறது. நாமக்கல்லில் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல அரசு கல்லூரிகள் இருந்த போதிலும் நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக மருத்துவக் கல்லூரி இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி நாமக்கல் உள்பட ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி நாமக்கல் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் 25 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால நாராயணமூர்த்தி என்பவர் பேசுகையில், "நாமக்கல் மாவட்டம் ஒவ்வொரு துறையிலும் உழைப்பாளர்களாலும் தொழிலாளர்களாலும் உயர்ந்துவரும் மாவட்டம். மருத்துவக் கல்லூரி அமைந்தால் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமின்றி மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் நாமக்கல் மருத்துவக் கல்லூரியுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனையாக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்படுவதால் பல்வேறு நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவக் கல்லூரி அமைய வித்திட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி" என்றார்.
இதையும் படிங்க: மாதா, ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரிகளின் தேர்வு மையம் ரத்து - எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்