நாமக்கல்: தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று (அக்.19) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் உள்ளன. சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை, மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் போன்றவற்றின் விலை உயர்வால், நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு 3 ஆயிரத்து 596 ரூபாயிலிருந்து, 904 ரூபாய்க்கு உயர்த்தி 4 ஆயிரத்து 550 ரூபாயாகவும், 10 சக்கர லாரிகளுக்கு 4 ஆயிரத்து 959 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 041 ரூபாயாக உயர்த்தி, 7ஆயிரத்து 059 ரூபாயாக ஆகவும், 12 சக்கர லாரிகளுக்கு 6 ஆயிரத்து 373 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 327 ரூயாய் உயர்த்தி 9 ஆயிரத்து 170 ரூபாயாகவும், 14 சக்கர லாரிகளுக்கு 7 ஆயிரத்து 787 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 413 ரூபாய் உயர்த்தி 11 ஆயிரத்து 290 ஆகவும், 16 சக்கர லாரிகளுக்கு 4 ஆயிரத்து 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 9ஆம் தேதி ஒரு நாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது எனவும், இந்த வேலைநிறுத்தத்தில் 6.50 லட்சம் லாரிகள் அன்று ஒருநாள் மட்டும் இயங்காது எனவும் தெரிவித்தார்.