கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் உள்ள தண்ணீர் கேன் சேமிக்கும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிய போது அவற்றை பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநரையும், ஆட்டோவையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர் மதுபாட்டில்களைக் கணக்கிட்டதில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,400 மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்தது யார், வேறு எங்காவது பதுக்கி வைத்துள்ளனரா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.