நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பைல்நாடு ஊராட்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு லோகாம்பாள், ரகுமான் என்ற இரு பிள்ளைகள். கடந்த 2016ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த லோகம்பாளை, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காதலிப்பதாகக் கூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக லோகாம்பாளின் சகோதரர் ரகுமான், ரமேஷிடம் தனது சகோதரிக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அவரது நண்பர்கள் ஆனந்தராஜ், கார்த்திக்குடன் சேர்ந்து ரகுமானை கடந்த 2016 மே 20ஆம் தேதி தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழவந்தி நாடு போலீசார், ரமேஷ், ஆனந்தராஜ், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டட்டப்பட்ட ரமேஷ், ஆனந்தராஜ், கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது, மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.