கள் இயக்கத் தலைவர் நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதிற்கு வாழ்த்துகள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 48 விழுக்காடு பருவமழை குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
மேலும், தற்போது மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது கடைமடை வரை சென்று அடையுமா என்பது கேள்விக்குறியாகும். மேலும், விவசாயிகள் நேரடி விதைப்பின் மூலமாக விவசாயம் மேற்கொண்டுவருகின்றனர். எனவே மேட்டூர் அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீரை திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.
முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது தவறில்லை, ஆனால் அந்த நோக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்" எனக் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரங்களின் மூலமாக அரசு விற்பனை செய்துவருவதற்கு தனது வேதனையையும் அவர் தெரிவித்தார்.
இந்திய அளவில் தேங்காய் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய நல்லசாமி, ஆனால் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். எனவே உடனடியாக அந்த தடையை தமிழ்நாடு அரசு நீக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.