நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் 10 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், ஆர். தாரணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தனர்.
இதையடுத்து, நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் பேசுகையில், “நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். உலக அளவிலும் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், குற்றவாளிகள் மீதான தண்டனைகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இருப்பினும் தண்டனையை அதிகரித்தாலும் குற்றங்கள் குறையாது. இது குறித்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் குற்றங்களைச் செய்தவர்கள், அதை உணர்ந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் எனத் தெரியவந்துள்ளது. நீதிபதிகள் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல, நீதி வழங்க மட்டுமே அதிகாரம் கொண்டவர்கள்” எனத் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவு வழக்குகள் தேங்கியுள்ளன. இதனைக் குறைக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குத் துணைபுரிய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சம்பந்தமான வழக்குகள் அதிகளவு பதியப்பட்டுவருகின்றன. இதனைத் தடுக்க அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், வழக்கறிஞர்கள் தங்களது வாகனத்தில், வழக்குரைஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் காவல் துறையினர் தங்களை நிறுத்தக் கூடாது என எண்ணுகின்றனர். வழக்கறிஞர்கள் கட்டாயம் சாலை விதிகளை மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், நீதிபதி ஏ.பி. லதா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பளர் அருளரசு, சார்பு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத குடிநீர் உற்பத்தி ஆலைகள் - அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!