நாமக்களில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 5,000 மாணவர்களும், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 2,000 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 750 க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மையத்தில் அதிகளவு கட்டணம் வசூல் செய்து, வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து நாமக்கல், சேலம், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் நாமக்கல், கரூர், சென்னை, சென்னிமலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கிரீன் பார்க் பள்ளி அலுவலகம், நீட் பயிற்சி மைய அலுவலகம், பள்ளியின் தாளாளர் சரவணன், இயக்குனர்கள் குணசேகரன், மோகன், சுப்பிரமணி ஆகியோரின் வீடுகள் என 17 இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ.30 கோடி பணத்தை பள்ளி ஆடிட்டோரியத்தில் இருந்து கைப்பற்றியதோடு, கணக்கில் வராத ரூ.150 கோடி சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ள நிலையில், அதனடிப்படையில் தொடர்ந்து சோதனையும், பள்ளி தாளாளர், இயக்குனர்கள் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை 2-வது நாளாக நடைபெற்றது. இச்சோதனையானது நாளையும் தொடர்ந்து நடைபெறும் என வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 12 ஆண்டுகளாக பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி!