முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி ராசிபுரத்தில் பாஜகவினர் அவரது உருவப்பத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கே.பி.ராமலிங்கம் வாஜ்பாயின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடியின் அரசால் கொண்டு வரப்பட்ட புதிய விவசாய சட்டங்களால் ஒருபோதும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. திமுக உரிய அனுமதியின்றி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.
அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு நடத்தவேண்டிய கிராம சபைக் கூட்டங்களை விதிமுறைகளுக்கு மாறாக திமுக நடத்திவருகிறது. இது தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் திமுகவால் தேர்தலிலே நிற்கமுடியாது. திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை பாஜகவில் இணைக்க வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மு.க. அழகிரி தனிகட்சி தொடங்கினால், நான் அதில் சேரமாட்டேன்” என தெரிவித்தார்.
அதேநேரம், மு.க.அழகிரி, திமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியில் இணைய மாட்டார் என்று அரசியல் நோக்கர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட கே.பி. ராமலிங்கம் அண்மையில் பாஜகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : மதுபோதையில் திமுக தொண்டர்கள் மோதல்: சமூக வலைதளங்களில் பரவும் காட்சி!