மார்கழி மாதத்தில் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி, நாமக்கல் கோட்டை சாலையிலுள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு கடந்த 4 நாள்களாகத் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 8 வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டது.
இன்று (ஜன.12) அதிகாலை 4.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர்.
சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவது உறுதி செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் ஆஞ்சநேயரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பிடித்த வடை மாலை தயாரிக்கும் பணி தீவிரம்!