நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி என்ற பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’நாமக்கல் மாவட்டத்தில் 3 நடமாடும் கிளினிக்குகள், 53 மினி கிளினிக்குகள் என மொத்தம் 56 கிளினிக்குகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுவரை 19 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. வரும் 30ஆம் தேதிக்குள் அனைத்து மினி கிளினிக்குகளும் திறக்கப்பட்டுவிடும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடம் நிரப்புவது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அனைத்து தொழிற்சங்கம், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வேறு எந்த கோரிக்கை இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறோம்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சுமுகமான தீர்வு விரைவில் ஏற்பட்டு 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்’ என்றார்.
தொடர்ந்து ஸ்டாலின் வேல் ஏந்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ’இதற்கான பதிலை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துவிட்டார்’ என்றார்.
இதையும் படிங்க:கேங்மேன் பணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன்? - ராஜேந்திரன் விளக்கம்