நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பூ மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டில் நேற்று (ஜூலை 29) மல்லிகை ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், முல்லை கிலோ 250 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 250 ரூபாய்க்கும், அரளிப்பூ 100 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 50 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்நிலையில், நாளை ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை, வரலட்சுமி நோன்பு ஆகிய விழாக்கள் தொடர்ந்துவருவதனால் இன்று (ஜூலை 30) பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இன்றைய மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 700 ரூபாய்க்கும், முல்லை 700 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாகப் பூக்களின் விலை சரிவைச் சந்தித்ததால் பூ விவசாயிகள் பெரும் நஷ்டத்திலிருந்து வந்தனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.