நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் வீடுகளில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்புக் குழுவினர், நாமக்கல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள் மேட்டுத்தெரு பகுதியில் கடந்த 17ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மேட்டுத் தெரு, மாரி கங்காணி தெருவில் கஞ்சா விற்பனை செய்து வந்த புவனேஸ்வரி என்பவரையும் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கார்த்திக் என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்களுடன் தொடர்பிலுள்ள முக்கிய கஞ்சா வியாபாரிகளான நாமக்கல்லைச் சேர்ந்த புவனேஸ்வரியின் கணவர் மாயாண்டி, அவரது 2ஆவது மனைவி பேபி, திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழரசி ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறுகையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக கரோனா தடுப்பு மருந்து விற்ற 7 பேர் கைது!