நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாழைத்தார் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்துவருகின்றனர்.
இங்கு விழையும் வாழைத்தார்களை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை,ஈரோடு, கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களை நேரடியாகவே ஏலம் மூலம் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (ஜூலை.15) நடைபெற்ற ஏலத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக 150 ரூபாய் வரை விற்பனையானது.
ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக 300 ரூபாய்க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் 400 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று 5 ரூபாய்கு விற்பனையானது.
நேற்று நடந்த ஏலத்தில் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கரோனா தொற்றால் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வராததால் வாழைத்தார்களின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.