நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, பைல்நாடு ஊராட்சிக்குட்பட்ட மேக்கனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூச்சம்மாள். இவருக்கு அப்பகுதியில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இவரது நிலத்தை, கொல்லிமலையைச் சேர்ந்த முருகேசன், பூபதி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றின் மூலம் அபகரிக்க முயற்சிப்பதாக பூச்சம்மாள்ளின் மகன் மீனாட்சி, கடந்த 2011ஆம் ஆண்டு நாமக்கல் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் முருகேசன், பூபதி ஆகியோரை உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மீனாட்சியும் அவரது தாயார் பூச்சம்மாளும் இன்று (செப்.13) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பிடுங்கியும், தண்ணீரை ஊற்றியும் இருவரையும் மீட்டனர். மீனாட்சி, பூச்சம்மாள் இருவரிடமும் தொடர்ந்து நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.