கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் இன்று (அக்டோபர் 16) காணொலி மூலம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 15 வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து காணொலி மூலம் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும், பிரச்னைகளையும் கூறினர். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மெகராஜ், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விவசாயிகள், “தற்போது பருவ மழை நன்றாக பெய்து வரும் நிலையில் மழைநீரை முழுவதுமாக சேமிக்க ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரங்களை இருப்பு வைத்திடவும், ஆவினில் பால் கொள்முதலுக்கு வாரம்தோறும் பணம் பட்டுவாடா செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆவினில் தாமதமின்றி பணப் பட்டுவாடா செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.