நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை நான்கு ரூபாய் 20 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து, நான்கு ரூபாயாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது.
கடந்த வாரம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை நான்கு ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனைசெய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி 20 காசுகள் குறைக்கப்பட்டு நான்கு ரூபாய் 20 காசுகளாக விலை குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும் முட்டை விற்பனை குறைந்து அதிகளவு தேக்கம் ஏற்பட்டதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இன்று (டிச. 07) மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு நான்கு ரூபாயாக விலை நிர்ணயம்செய்யபட்டுள்ளது.
இது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், “டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு விற்பனையும் குறைந்தது.
அதேபோல், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் புயல், மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முட்டைகள் அதிகளவு தேக்கமடைந்ததால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இவ்விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கனமழை: மாநகரின் முக்கியச் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்!