நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளையும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரம் குறித்தும் அமைச்சர் தங்கமணி இன்று நேரில் ஆய்வு செய்தார். அம்மா உணவகங்களில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கமணி அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உடன் இருந்தார். இந்த ஆய்வினை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, “மாவட்டத்தில் செயல்படக்கூடிய அம்மா உணவகங்களில் மூன்று வேளை உணவும் பொது மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் தினசரி 3 ஆயிரத்து 500 பேருக்கு இலவசமாக மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசின் புதிய மின்சார கொள்கையை முழுமையாக மாநில அரசு ஏற்காது. மக்களுக்கு பாதிப்பு உள்ள சரத்துகள் நீக்கப்பட்ட பின்பு தான் ஏற்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் என்றும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்தார்.