நாமக்கல்: வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2021, மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்திற்கொண்டு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்கள், அனுமதிச் சான்றிதழ்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் 2021, மார்ச் 31ஆம் தேதி வரை செல்லும்.
இவை பிப்ரவரி 2020 முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு பொருந்தும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பிப்ரவரி ஒன்றாம் தேதியோடு காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகனங்களுக்கான தகுதிச் சான்று புதுப்பித்தலை டிசம்பர் 31 வரை புதுப்பித்துக்கொள்ள மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் கால அவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.