37 வார்டுகளைக் கொண்ட நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி, வள்ளிபுரம் ஊராட்சி பகுதிகளை இணைத்து நகராட்சி பரப்பளவை அதிகரிக்கும்விதமாக கருத்துக் கேட்புக் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அம்மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வகுரம்பட்டி, வள்ளிபுரம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது வகுரம்பட்டி ஊராட்சியில் திருச்சி சாலையில் உள்ள பொன்விழா நகர், மாருதி உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் நகராட்சியுடன் இணைக்க வேண்டும், மற்ற பகுதிகள் விவசாயத்தை நம்பியே அதிகளவு பொதுமக்கள் வாழ்ந்துவருவதால் அவர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பசுமை வீடு, கழிவறைத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் கிடைக்காத நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, நகராட்சியுடன் வகுரம்பட்டியின் அனைத்து கிராமங்களை இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்த ஆட்சியர், பொதுமக்கள் அனைவரும் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் நலன் பாதிக்காத வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஏஜென்சிகளின் உரிமங்களை ரத்து செய்க!