நாமக்கல்: தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர், அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் பேருந்து நிலையத்தில், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்கு சென்று, விஜயகாந்த்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அதில், தேமுதிக 15வது வார்டு துணைச் செயலாளரும், கட்சி நிர்வாகியுமான மோகன் (52) என்பவர், அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வீட்டிற்குச் சென்ற அரைமணி நேரத்தில், மோகன் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாமகிரிப்பேட்டை மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மோகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறி உள்ளனர். பின், அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, நாமகிரிப்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியைத் தாங்க முடியாமல், கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக.. முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்!