நாமக்கல்: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநில பாஜகவின் புதிய தலைவராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலையை நியமித்து கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 14) சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று நாமக்கல் மாவட்ட பாஜகவினர் பேனர் வைத்திருந்தனர்.
விடாது கொங்கு சர்ச்சை
அந்த பேனரில் 'கொங்கு நாட்டின் வருங்கால முதலமைச்சரே' என அச்சிடப்பட்டிருந்த வாசகம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கொங்கு மண்டலத்தைப் பிரித்து தனிமாநில கோரிக்கை அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் வலுத்துவருகிறது.
இது தமிழ்நாட்டைக் கூறுபோடும் செயல் எனவும், இந்த விஷமப் பரப்புரையை மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நாமக்கல் மாவட்ட பாஜகவினர் வைத்த பேனர் சர்ச்சையை மேலும் கிளப்பியுள்ளது. மேலும், இந்த பேனரை அகற்ற வேண்டும் என திராவிடர் கழகத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குறுகிய காலத்தில் பதவி - அண்ணாமலை கடந்து வந்த பாதை!