நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அம்மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சரக்கு லாரி போக்குவரத்து அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, உரிய அனுமதியுடன் லாரிகள் போக்குவரத்து நடைபெற்றுவரும் நிலையில், லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களிடமும் ஆட்சியர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாமக்கல் மாவட்டத்தின் நுழைவு வாயில்களான 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்படுவதோடு, பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகளின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான 61 நபர்களில், 50 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 11 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டால் நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக விரைவில் மாறிவிடும்.
இன்று சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற 12 பேர், திம்மநாயக்கன்பட்டி எல்லை சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மே மூன்றாம் தேதிக்குப் பிறகு அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும். மாவட்டத்தில் வேறு எவ்வித தளர்வுகளும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பச்சை மண்டலமாகவே தொடரும் கிருஷ்ணகிரி