நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கிழக்கு ரத வீதியில் நேற்று மாலை சுமார் 6.45 மணி அளவில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தாறுமாறாக சென்றுள்ளது.
இதையடுத்து, சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த வானங்கள், இருசக்கர ஓட்டிகள், பாதசாரிகள் மீது அசுரவேகத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில், சைக்கிளில் சென்ற மனோகரன் (55), பாதசாரிகள் கண்ணன் (45), செல்லகுமார் (19), சபரீஸ்வரி (17) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டிச்சென்றது திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் விவேகானந்தன் என்பதும், காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, விவேகானந்தன் மீது வழக்கு பதிந்து அவரை கைதுசெய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.