நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் மூலிகை சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலை பகுதியில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்ககை அம்மன் கோவில், நம் அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை நீர்விழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, சீக்குபறை வியூ பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா மையங்களாக அமைந்துள்ளது.
இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி மற்றும் மாசிலா அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் இன்று(ஆகஸ்ட்-1) உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அருவிகளில் நீர் வரத்து குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதிகளில் கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் கொடை மற்றும் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் அருவிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை