சென்னை: சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பட்டா கத்தியைப் பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதும், லைக் கிடைக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியை வைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இச்செயல்களைத் தடுக்க காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள், இளைஞர்களைக் காவல்துறையினர் பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய நபர் திருமங்கலத்தைச் சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் என்பதும் அவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, திருமங்கலம் காவல்துறையினர் கேக் வெட்டிய ஆனஸ்ட் ராஜ் மற்றும் அவரது நண்பர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.