தற்போதைய காலகட்டத்தில் விளம்பரமின்றி எந்த வியாபாரமும் கிடையாது என்ற சூழல் உள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வியாபார யுத்தியை கையாளுகின்றனர். அந்த வகையில் தற்போது நித்யானந்தாவின் கைலாசா நாடு குறித்துப் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இங்கு பலரும் கைலாசாவுக்குச் செல்லவும், அங்கு வியாபாரம் செய்வதற்கும் தங்கள் விருப்பத்தினை தெரிவித்துவருகின்றனர். இதனைச் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சற்று வித்தியாசமாக யோசித்துள்ளார் காரைக்காலில் மின்சாதன கடை நடத்திவரும் ஜாபர் உசேன். தனது கடை முன்பும், சமூக வலைதளங்களிலும் ஒரு விளம்பரத்தினைப் பதிவுசெய்துள்ளார்.
கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க மதுரை தொழிலதிபர் நித்யானந்தாவுக்கு கடிதம்!
அதில் தனது கடையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்கு கடன் அட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு), யூபிஐ ஆகியவற்றுடன் கைலாசா பொற்காசுகளையும் கொண்டு பணம் செலுத்தலாம் என்று அந்த விளம்பரத்தில் அதிரடிக் காட்டியிருந்தார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் அதிக பகிர்வுகளைக் கண்டுவருகிறது.
ஜாபர் உசைன் இதற்கு முன் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடையின் வாசலில், "தம்பி போங்க, தம்பி போய் மாஸ்க் போட்டு கிட்டு வாங்க'', "போ போ கூட்டம் போடாத போ", டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு" போன்ற பிரபலமான வடிவேலுவின் சூனா பானா கதாபாத்திர புகைப்படம், கைப்புள்ள கதாபாத்திர புகைப்படங்களை வைத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பலரின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.