நாகை மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெறும் இந்தத் திருவிழாவில் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் 21 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வருவதைத் தடுக்கும் வகையில், ஆயிரத்து 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி கோயிலுக்கும் செல்லும் பகுதிகள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக வேளாங்கண்ணி ஆர்ச் வழி மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாள அட்டையை சோதித்து உள்ளூர்வாசிகள் மட்டும் வேளாங்கண்ணி உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று மாலை ஐந்து மணிக்கு, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.
பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வேளாங்கண்ணியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருவிழா நேரத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தால் திணறும் வேளாங்கண்ணி, கரோனா பரவல் காரணமாக இன்று களையிழந்து காணப்படுகிறது.