கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் உள்ள நூர்ஹலிமா மஸ்ஜீது பள்ளிவாசலில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 44 இஸ்லாமியர்கள் வருடத்திற்கு நான்கு முறை மயிலாடுதுறை வந்து கம்பளி, போர்வை, ஜமுக்காளம், பாய் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வியாபாரம் செய்வதற்கு மயிலாடுதுறை வந்த இவர்கள் ஊரடங்கு உத்தரவால் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகி சம்சுதீன் அளித்த தகவலின் பேரில் சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் தலைமையில் அங்கு சென்ற அலுவலர்கள் 44 பேரையும் பரிசோதனை செய்தனர். பின்னர் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து சுகாதார துறையினர் அந்த 44 பேரையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்19 தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு தோள் கொடுக்கும் மாற்றுத்திறனாளிகள்!